சென்னை மாநகராட்சியில் சட்டமன்ற தொகுதி வாரியாக மண்டலம் பிரிக்கும் திட்டம் நிதி பற்றாக்குறையால் கைவிடப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியை சுற்றியுள்ள, ஸ்ரீபெரும்புதுார், திருப்போரூர், பூந்தமல்லி, பொன்னேரி உட்பட, 50 உள்ளாட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலமாக தற்போதுள்ள 200 வார்டுகளை, 300 ஆக உயர்த்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம், ஏற்கனவே, 2011ம் ஆண்டில், சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது. அவ்வாறு விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் தற்போது தான், திட்ட பணிகள் நடந்துவருகின்றன.
அதேபோல், குடிநீர் வாரியம் சார்பில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால், சென்னை மாநகராட்சியை தற்போது விரிவாக்கம் செய்யும் திட்டம் தற்போது இல்லை என, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.