நளினி வழக்கு... "4 வாரங்களில்.." - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2023-08-25 02:42 GMT

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, முன் விடுதலையான நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது, 4 வாரங்களில் முடிவெடுக்கும்படி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் இருக்கும் தன் மகளுடன் வசிக்க விரும்புவதால், பாஸ்போர்ட் வழங்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஆன்-லைன் மூலமாக ஜூன் 12 ஆம் தேதி விண்ணப்பித்து, ஜூன் 14 ஆம் தேதி சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் நேரில் சென்று ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். காவல்துறை சரிபார்ப்பிற்கு பிறகு பாஸ்போர்ட் வழங்கப்படும் என பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது திருவான்மியூரில் வசிக்கும் வீட்டிற்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி திருவான்மியூர் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி சென்ற நிலையில், தற்போது வரை பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில், விசாரணை நிறைவடைந்து அறிக்கையை பாஸ்போர்ட் அதிகாரியிடம் ஆகஸ்ட் 11 ம் தேதி அளித்து விட்டதாக தெரிவிக்கபட்டது. இதையடுத்து, நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டுமென மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்