சென்னையிலும் ஊடுருவிய டேஞ்சரான `மணி Mule' கேங் - இளைஞர்களின் வீக்னெஸ்ஸே குறி..
சென்னையிலும் ஊடுருவிய டேஞ்சரான `மணி Mule' கேங் -
இளைஞர்களின் வீக்னெஸ்ஸே குறி.. வினோத முறையில் ரத்தம் உறிஞ்சும் ஜோக்கர்ஸ்
இந்திய பணத்தை குறைவான விலையில் அமெரிக்க டாலராக மாற்றி தருவதாக கூறி தொழிலதிபர்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை சென்னை சைபர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்திய ரூபாயை, கிரிப்டோ கரன்சி மூலமாக குறைவான விலையில் அமெரிக்க டாலராக மாற்றி தருவதாக சிலர் ஆசை வார்த்தை கூறி, 10 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக அதில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, தேனியை சேர்ந்த ஒருவரது வங்கிக் கணக்கிற்கு பணம் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, தொடர் விசாரணை நடத்திய போலீசார், "Money Mule" கும்பல் மூலம் வங்கி கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வந்த தேனியை சேர்ந்த அபிராஜா, மதுரையை சேர்ந்த அஸ்வந்த், கரூரை சேர்ந்த முகமது இஸ்மாயில் பர்வேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
3 பேரும், பட்டப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, ஆன்லைன் மோசடியில் பணம் திரட்ட முடிவு செய்து, தேனியை சேர்ந்த குமரேசன், லோகநாதன் மற்றும் மகேஷ் குமார் ஆகிய மேலும் 3 பேரை கூட்டாளிகளாக சேர்த்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, பார்ட் டைம் வேலை தேடும் இளைஞர்களை, வலை விரித்து, மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறி, டெலிகிராமில் உள்ள தொழில் ரீதியான குரூப்புகளில் இணைத்துள்ளனர்.
அவர்கள் மூலமாக, தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு, குறைந்த விலையில் அமெரிக்க டாலராக மாற்றித் தருவதாக பேச வைத்து மோசடி வலைக்குள் விழ வைத்துள்ளனர்.
இதுபோன்ற மோசடி வாயிலாக, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உட்பட 15 மாநிலங்களில் உள்ள தொழிலதிபர்களிடம் இருந்து கடந்த ஜனவரி முதல் தற்போது வரை இரண்டரை கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மோசடி பணத்தில் உல்லாச வாழ்க்கையை அனுபவித்த 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 11 லட்சம் ரூபாய் பணம் சொகுசு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததோடு, இதுவரை எத்தனை பேரிடம், எவ்வளவு மோசடி செய்துள்ளனர்? பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.