புகார் கொடுக்க வருபவர்களை காவல் துறையினர் தாக்கினால், சாமானிய மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காவல் துறை இழக்க நேரிடும் என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கூறியுள்ளது.
மேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற தன்னை தாக்கிய துணை காவல் கண்காணிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்ய மேலூர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிடக் கோரி சுகுமாரன் என்ற வழக்கறிஞர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி புகழேந்தி, இந்த வழக்கு குறித்து தென் மண்டல காவல்துறை தலைவர் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, உதவி ஆணையர் ரவிக்குமார் காவல் ஆய்வாளர் சார்லஸ் உள்ளிட்ட 3 காவலர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தென் மண்டல காவல்துறை தலைவர் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேலும், வழக்குப் பதிவு செய்ய காலதாமதம் செய்த மேலூர் காவல் ஆய்வாளர் மன்னவன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கையை பார்த்த நீதிபதி, தென்மண்டல காவல்துறை தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததை நீதிமன்றம் பாராட்டுகின்றது என்று கூறினார்.
அத்துடன், புகார் கொடுக்க வருபவர்களை காவல் துறையினர் தாக்கினால், சாமானிய மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காவல் துறை இழக்க நேரிடும் என்று என்றும் நீதபதி குறிப்பிட்டார்.