கோயில் நிலங்களை பாதுகாக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கோயில் நிலங்களில், கனிம வள திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காததற்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை திருவண்ணாமலை இணை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில், சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, சேலம் சரக டிஐஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 12 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை பதிவு செய்துகொண்ட உயர்நீதிமன்றம், கோயில் நிலங்களில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுத்து பாதுகாக்க, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.