லோன் வாங்கியவர்கள்தான் டார்கெட்- உஷார்..சென்னையில் மாய மோசடி...யாருக்கெல்லாம் இப்படி கால் வந்தது?

Update: 2024-07-26 05:56 GMT

லோன் வாங்கியவர்கள்தான் டார்கெட்- உஷார்..சென்னையில் மாய மோசடி...யாருக்கெல்லாம் இப்படி கால் வந்தது?

வங்கியில் கடன் வாங்கியவர்களை குறிவைத்து பணம் பறிக்கும் மோசடி அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய ஒரு விரிவான பார்வை.

காலத்திற்கு ஏற்றார்போல் மோசடிகளும் புதுப்புது வடிவங்களில் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பண பரிவர்த்தனைகளில் இணைய பயன்பாடு அதிகரித்த பிறகு நூதன முறையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறன.

உங்கள் பெயருக்கு விலை மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வந்துள்ளது; அதை கொரியரில் அனுப்பி வைக்க முன்பணம் அனுப்புங்கள் என்று கூறுவது ஒருவகை,

உங்கள் பெயருக்கு பார்சலில் போதைப்பொருள் வந்துள்ளது என காவல் துறை அதிகாரிபோல் பேசி மிரட்டி பணம் பறிப்பது மற்றொரு வகை.

உங்கள் வங்கி கணக்கு சட்ட விரோத பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறி பணம் பறிக்கும் குற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன.

இப்போது, வங்கியில் கடன் வாங்கியவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் கடனை முழுமையாக செலுத்தவில்லை என்று கூறி, பணம் பறிக்கும் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளன.

சென்னையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், சைபர் கிரைம் பிரிவில் இதுதொடர்பாக புகார் அளித்தார்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்டதில், மோசடி கும்பல், வங்கி அதிகாரிகள் போல் கடன் வாங்கியவர்களைத் தொடர்பு கொண்டு பேசி, ஏற்கனவே வாங்கிய கடனை முழுமையாக செலுத்தவில்லை எனக் கூறி பேசத் தொடங்குகிறார்கள்.

வாடிக்கையாளர்கள் வங்கியில் வாங்கிய கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தியிருந்தாலும், ஒருவேளை முழுமையாக கட்ட தவறி விட்டோமோ என சந்தேகம் அடைகிறார்கள். இதை பயன்படுத்திக் கொள்ளும் மோசடி கும்பல், பணத்தை செலுத்தச் சொல்லி மிரட்டுகிறார்கள்.

இலைலயெனில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வங்கியில் மீண்டும் கடன் பெறவே முடியாதும் என்றும் எச்சரிக்கிறார்கள். வங்கி அதிகாரிகள் போல் மட்டுமன்றி, வழக்கறிஞர் போலவும் பேசி, வங்கி வாடிக்கையாளர்களை மிரட்டுகிறார்கள். அப்போது, குறைந்தபட்ச தொகையை செலுத்தி கடனை முடித்து விடலாம் என அவர்கள் கூறுவதால், அவர்களை நம்பி வாடிக்கையாளர்கள் சிலர் பணம் செலுத்தி ஏமாறுவதாக தெரிய வந்துள்ளது.

வங்கிகள், கடனை வசூலிக்கும் நடைமுறையை தனியார் நிறுவனங்கள் மூலமாக நிறைவேற்றுவதால், பொதுமக்கள் நம்பி ஏமாந்து விடுவதாக சைபர் கிரைம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகளில் கடன் வாங்குவோரின் விவரங்கள், தனியார் நிறுவனங்களுக்கு எப்படி கிடைக்கிறது என்று சைபர் கிரைம் அதிகாரிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

எனவே, செல்போனில் உங்களை ஒருவர் அழைத்துப் பேசும்போது, வாடிக்கையாளர்கள் தாங்கள் கடன் வாங்கிய வங்கிகளை தொடர்பு கொண்டு, கடன் நிலுவை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்