ஜப்பான்காரன் மூளையே மூளை..! "இந்த ஸ்பூன் உங்க வீட்ல இருந்தா... நோயே வராது..."

Update: 2024-05-21 15:57 GMT

சாப்பாட்டில் இனி உப்பை குறைக்க தேவையில்லை, இந்த ஸ்பூன் இருந்தால் போதும் உப்பு சுவையும் குறையாது, நோயும் வராது எனக் கூறுகிறது, ஜப்பான் நிறுவனம் ஓன்று.

இந்தியாவில் சுமார் 22 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தரவுகள் கூறுகின்றன...

இந்த உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள் என்று காலம் காலமாக மருத்துவர்கள் நமக்கு அறிவுரை வழங்கி வந்தாலும்... ருசிக்கு அடிமையான நாக்கு அதை கேட்க மறுக்கிறது.

தினசரி ஒருவர் ஐந்து கிராம் அளவிற்கு உணவில் உப்பு எடுத்துக் கொள்ளலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது. ஆனால் இந்தியர்களோ நாளொன்றுக்கு எட்டு கிராம் அளவிற்கு உணவில் உப்பு சேர்த்துக் கொள்கிறார்கள்...

நாம்தான் இப்படி என்று பார்த்தால்... ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களாக அறியப்படும் ஜப்பானியர்கள் நம்மை விட சாப்பாட்டில் நாளொன்றுக்கு 10 கிராம் அளவிற்கு அதிக உப்பு எடுத்துக் கொள்கிறார்களாம்.

இந்த நிலையில் தான்... பல புது விதமான கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போன ஜப்பானியர்கள்... இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க இம்முறை எலெக்ட்ரிக் ஸ்பூன் ஒன்றை அறிமுகம் செய்து அசத்தி இருக்கிறார்கள்.

இந்த ஸ்பூன் மூலம் சாப்பிட்டால் ஒருவர் ருசியை காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டிய நிலை வராது என்பதுதான் அவர்கள் நமக்கு கொடுக்கும் கேரண்டி.

அதாவது உணவில் இருக்கும் உப்பு சுவையை மூன்று மடங்கு அதிகமாக நம் நாக்கு உணரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த எலெக்ட்ரிக் ஸ்பூன்.

இது எல்லாமே தொழில்நுட்பத்தின் மேஜிக்கால் சாத்தியமாகி இருப்பது தான் ஆச்சரியம்.

லித்தியம் பேட்டரியில் இயங்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்பூன் கொண்டு உணவை நாம் உட்கொள்ளும் பொழுது, ஸ்பூனில் உள்ள பட்டனை அழுத்த வேண்டும்.

இதன் மூலம் நமது நாக்கிற்கு லேசான மின்னூட்டம் செலுத்தப்படும்... இது நாக்கில் உள்ள சுவை மொட்டுகளில் சோடியம் அயன்களை அதிகரிக்க செய்து.... உப்பு சுவையை நாம் அதிகம் உணர வழி வகுத்து விடும்.

இதன் மூலம்... சாப்பாட்டில் உப்பை குறைக்காமலேயே உயர் ரத்த அழுத்தத்தால் மக்கள் பாதிக்கப்படுவது குறையும் என நம்புகின்றனர், ஜப்பான் விஞ்ஞானிகள்.

மதுபான தயாரிப்பு நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ள இந்த ஸ்பூன் இந்த மாதம் ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது.

முதற்கட்டமாக 200 ஸ்பூன்கள் விற்பனைக்கு வரும் என்றும் வெளிநாட்டு சந்தைக்கு அடுத்த ஆண்டு இந்த எலெக்ட்ரிக் ஸ்பூன் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்புபடி, இந்த ஸ்பூன் ஒன்றின் விலை 10 ஆயிரம் ரூபாய் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த காஸ்ட்லி ஸ்பூனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்....

Tags:    

மேலும் செய்திகள்