படிக்கும் பள்ளியிலே விவசாயிகளாக மாறி சாகுபடி செய்யும் மாணவர்கள் - ஹெட்மாஸ்டருக்கு குவியும் பாராட்டு
திருப்பூர் நகரில், அரசு பள்ளியில் தோட்டம் அமைத்து, சத்துணவு திட்டத்துக்கு மாணவர்கள் இலவசமாக காய்கறி வழங்கி வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் உள்ள அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விவசாயம், இயற்கை உணவுப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, பசுமைப் படையை பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் அமைத்துள்ளார். அந்த படையினர், பள்ளியின் பின்புறமாக உள்ள காலி இடத்தில் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் , பீர்க்கங்காய், முருங்கைக்காய் மற்றும் பழ வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு மூலிகை செடிகளையும் அவர்கள் பராமரித்து வளர்த்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சத்தான காய்கறிகள் சத்துணவுத் திட்டத்துக்கு பயன்படுத்தப்படு வருகிறது. இதுபோன்று அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தைக் கற்றுத்தர வேண்டும் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.