முற்செடிகளை போட்டு போராட்டம்.. காரணத்தை அடித்து சொன்ன மக்கள்
"எங்கள் ஊருக்கு போறதுக்கே வழி இல்லை, மற்ற ஊர்க்காரங்க எப்படி போகலாம்" என்று, கிராம மக்கள், சாலையில் முள்செடியை வெட்டிப்போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள செங்களத்துப்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையான சாலை வசதி இல்லாததால், கடந்த பல வருடங்களாக தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தை நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர்.
சில மாதங்களாக அந்த நடைபாதையை பயன்படுத்த நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் வருவாய்த்துறையினரிடம் புகார் செய்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு நத்தம் புறம்போக்கு நிலத்தில் உள்ள வண்டிப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்து கொடுத்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அந்த வண்டிப்பாதையில் மழைநீர் தேங்கி அதை பயன்படுத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதோடு, நிலத்தின் உரிமையாளர்களும் முள் செடிகளை வெட்டிப்போட்டு நடைபாதையை அடைத்ததால், பொதுமக்கள் நடந்து செல்லமுடியாமல் அவதியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த செங்களத்துப்பட்டி கிராம மக்கள், பாலதோட்டத்தில் இருந்து கிணத்துப்பட்டி செல்லும் சாலையில், 3 இடங்களில் முட்செடிகளை வெட்டி சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.