மேயர் Vs டபேதார் - பற்றியெரியும் சர்ச்சை - லிப்ஸ்டிக் போட்டால் நடவடிக்கையா..? கிளம்பிய மாதவி புயல்

Update: 2024-09-25 17:11 GMT

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் பளிச்சென லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், நடந்தது என்ன ? என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னையின் முதல் பெண் தபேதாருடைய பணியிட மாற்றமும், அவரின் பளிச் லிப்ஸ்டிக்கும் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது...

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாரான 50 வயதான மாதவி, மேயர் பிரியாவுக்கு தபேதாராக நியமிக்கப்பட்டார்.

வெள்ளை நிற ஆடையும், சிவப்பு நிற தோல் பட்டையும், என தபேதார் சீருடையுடன், செங்கோலை ஏந்தியபடி வழிவிடும்படி ஒலி எழுப்பிக் கொண்டே மேயருக்கு முன் செல்வார் தபேதார் மாதவி..

காலை முதல் மாலை வரை மேயர் அலுவலகத்திலேயே இருக்கும் அவர், லிப்ஸ்டிக் போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, அவர் லிப்ஸ்டிக் போட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பணியின் போது லிப்ஸ்டிக் போடக்கூடாது என மேயர் பிரியாவின் தனிப்பட்ட உதவியாளர் சிவசங்கர் அறிவுறுத்தியதாகவும், அதையும் மீறி தபேதார் மாதவி லிப்ஸ்டிக் போட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் திடீரென மேயர் அலுவலகத்தில் இருந்து மணலி மண்டல அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்..

இந்நிலையில், தனது பணியிட மாறுதலுக்கு லிப்ஸ்டிக் போட்டதே காரணம் என மாதவி தரப்பில் கூறப்படுகிறது..

முன்னதாக தபேதார் மாதவிக்கு வழங்கிய மெமோவிற்கு அவர் வழங்கிய பதிலில், நீங்கள் உதட்டுச்சாயம் அணிய வேண்டாம் எனக் கேட்டீர்கள், ஆனால் நான் உதட்டுச்சாயம் பயன்படுத்தினேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு குற்றமாக இருந்தால், நான் உதட்டுச்சாயம் போடுவதை தடை செய்யும் அரசாங்க உத்தரவை எனக்கு காட்டுங்கள் என பதிலளித்துள்ளார்..

இதனால், லிப்ஸ்டிக் பூசியதற்காகவே அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என பரவலாக பேசப்பட்ட நிலையில், அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது மேயர் அலுவலக தரப்பு...

பணி நேரத்தில் பணிக்கு வருவதில்லை, மேலதிகாரிகளின் உத்தரவை மீறுதல், பணியில் அலட்சியம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளே பணியிட மாறுதலுக்கு காரணம் என தெரிவித்துள்ளது..

மேலும் மாதவி இடமாற்றத்துக்கும் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், லிப்ஸ்டிக் விவகாரம் தேவையற்றது என்ற கருத்தும் நிலவி வருகிறது..

இப்படி பல கருத்துகளும், விமர்சனங்களும் பல தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டு வர, பூதாகரமாகி வருகிறது தபேதார் மாதவியின் லிப்ஸ்டிக் விவகாரம்....

Tags:    

மேலும் செய்திகள்