கண்முன்னே கருகிய குழந்தைகள்...நெஞ்சில் அடித்து கதறிய தாய்கள்...டெல்லி சம்பவத்தில் பல அதிர்ச்சிகள்

Update: 2024-05-27 06:23 GMT

கண்முன்னே தீயில் கருகிய குழந்தைகள்

அய்யோ...நெஞ்சில் அடித்து கதறிய தாய்கள்

தாயை கூட உள்ளே அனுமதிக்க வில்லையா?

நாட்டையே உலுக்கிய சோகத்தில்

வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்

வடமாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் தீ விபத்துகள் பல உயிர்களை பலி வாங்கி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்க காரணமாகிய டெல்லி குழந்தை நல மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

குஜராத்தின் ராஜ்கோட் விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த நிலையில், அதே நாளில் கிழக்கு டெல்லி பகுதியில் மருத்துவமனை ஒன்றில் நடந்த தீ விபத்தில் ஏழு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருப்பது சோகத்தின் உச்சம்.

அதோடு, கிழக்கு பகுதியில் உள்ள கிருஷ்ணா நகரில் உள்ள குடியிருப்பில் நடந்த மற்றொரு தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படி வடமாநிலங்களின் பல பகுதிகளில் வெயில் சதத்தை தாண்ட கூடும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்து அரங்கேறிய தீ விபத்துகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்த டெல்லி விவேக் விகாரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மருத்துவமனையில் இருந்த 12 குழந்தைகளும் மீட்கப்பட்டு வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஆறு குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு துறையினருக்கு இரவு 11.30 மணி அளவில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலான போராட்டத்திற்கு பிறகே தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது தீ விபத்திற்கு பிறகு சிலிண்டர் வெடித்ததா? என்பது தெ​ரியாத நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது

மறுபுறம் இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை நடைபெற்று வந்ததாகவும், இது குறித்து முன்னரே புகார் அளித்ததாகவும் ஒருவர் பேட்டியளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, இந்த மருத்துவமனை தீயணைப்பு துறையின் என்ஓசி சான்று இல்லாமல் செயல்பட்டு வந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தங்கள் குழந்தைகளுக்கு என்ன நேர்ந்ததோ என்று

பதறி போய் மருத்துவமனை முன்பு திரண்ட தாய்மார்கள்,

குடும்பத்தில் ஒருவரை குழந்தையுடன் தங்க அனுமதிக்குமாறு மருத்துவமனையிடம் கேட்டபோது அவர்கள் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதற்கிடையே தலைமறைவான மருத்துவமனை உரிமையாளர் நவீன் கிச்சியை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பச்சிளம் குழந்தைகளின் இறப்பிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இருதயத்தை நொறுக்கும் இந்த சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் யாரும் தப்பமாட்டார்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனிடையே, மருத்துவமனை உரிமையாளரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்