சமூக அக்கறையுடன் சைக்கிளிங் செய்யும் தம்பதி - மனநலம் & போலியோ குறித்து விழிப்புணர்வு பயணம்

Update: 2024-05-09 16:33 GMT

சமூக வலைத்தளங்களில் இளசுகள் மூழ்கி கிடக்க, சமூக அக்கறைக் கொண்டு சைக்கிளிங் மேற்கொண்ட இளம் ஜோடிகள் குறித்த செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு..


ரீல்ஸ், மீம்ஸ், ஸ்டோரி என செல்போனுக்குள் மூழ்கி கிடக்கும் இளசுகளுக்கு மத்தியில், சமூக அக்கறையுடன் செயல்பட்டு கவனம் ஈர்த்துள்ளனர் சென்னையை சேர்ந்த சங்கரி சதீஷ் ஜோடி.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதல் பறவைகளாக இருந்த இருவரும், 2022ல் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தனர்.

திருமணத்திற்கு முன்னரே 2019ம் ஆண்டு சென்னையில் இருந்து பூட்டான் வரை சைக்கிளிங் செய்து கலாம் புக் ஆஃப் வோர்ல்ட் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்று சாதனை படைத்திருந்தார் சதீஷ்.

இந்நிலையில், திருமணத்திற்கு பின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஓடும் ரோபோட் வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு, சமூக நலனுக்காக சைக்கிளிங் என்ற பேஷனை(passion) சதீஷும் அவரது மனைவி சங்கரியும் கையில் எடுத்தனர்.

ஆனால் இந்த ஜோடியின் பயணம், ஊர் சுற்றி பார்ப்பதை மையமாக கொண்டதல்ல.. மக்களிடையே மனநலம் பேணுதல் குறித்த விழிப்புணர்வு மற்றும் போலியோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மேற்கொண்ட பயணம்..

தமிழ்நாடு முதல் சைக்கிளிங் பயணத்தை தொடங்கிய சங்கரி, சதிஷ் ஜோடி, கொங்கன் மலைத்தொடர் வழியாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவா, போன்ற இடங்களுக்கு சென்று மும்பையில் தங்களது பயணத்தை முடித்தனர்.

செல்லும் வழியெல்லாம் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மனநலம் குறித்து, போலியோ பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

மழலையர்கள் மனதில் பதியும் வகையில் கதை ரீதியிலும், சிறு நாடகமாகவும் இவ்வகையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தனர்.

விழிப்புணர்வுக்கான இப்பயணத்தின் போது, இந்த ஜோடி எண்ணற்ற சிக்கல்களையும் எதிர்கொண்டனர். தங்கும் இடத்திற்கு திண்டாடிய இவர்களுக்கு, ஆலயங்களும், பரந்த மனம் கொண்ட மக்களின் வீடுகளும் அடைக்கலம் தந்தன.

பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணத்தின் போது கிடைத்த உணவை உண்டு உத்வேகத்துடன் பயணித்தனர். அத்துடன் மாதவிடாய் நேரங்களில், வலியால் துடித்த போதும் கூட, மனம் தளராமல் சைக்கிள் பெடலை மிதித்தார் சங்கரி.. 

Tags:    

மேலும் செய்திகள்