போலீசிடம் பணத்தை ஆட்டைய போட்ட சக போலீஸ் - காஷ்மீர் விரைந்தது தனிப்படை | Money Theft | Police

Update: 2023-09-18 04:05 GMT

பரங்கிமலையில் மத்திய தொழிற்படை காவல் உதவி ஆய்வாளர் வங்கி கணக்கில் இருந்து நான்கரை லட்சம் பணத்தை மனைவியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றிய போலீஸ்காரரை தேடி, தனிப்படை காஷ்மீர் விரைந்துள்ளது.

சென்னையை அடுத்த ஆலந்தூரில் மத்திய தொழிற்படை போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு மத்திய தொழிற்படை போலீஸ் சார்பு உதவி ஆய்வாளர்

உத்தரபிரதேசத்தை சேர்ந்த குல்பீர் சிங் பணியாற்றி வருகிறார். அவருடன் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த வினோத் குமாரும் காவலராக பணியாற்றி வருகிறார்.

இருவரும் ஒன்றாக தங்கி வந்த நிலையில், குல்பீர் சிங்கின் செல்போன் லாக்கை, வினோத் குமார் தெரிந்து வைத்துள்ளார். இந்த நிலையில் குல்பீர் சிங் மகன் குனால், சில தினங்களுக்கு முன் உத்தரபிரதேசத்தில் வங்கியில் பணம் எடுக்க சென்ற போது, பணம் இல்லை என்பது தெரியவந்தது.

இது குறித்து தந்தை குல்பீர் சிங்கிற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவர் வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது வினோத்குமார் தனது மனைவியின் வங்கி கணக்கிற்கு நான்கரை லட்ச ரூபாய் பணத்தை மாற்றியது தெரியவந்தது. இது தொடர்பாக பரங்கிமலை போலீசில் குல்பீர்சிங் புகார் செய்தார். இதை அறிந்த வினோத்குமார் தனது சொந்த ஊருக்கு தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து வினோத் குமாரை பிடிக்க பரங்கிமலை போலீஸ் தனிப்படை காஷ்மீர் சென்று உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்