"நகைகள் ஆய்வு - தினமும் அறிக்கை"
கூட்டுறவு சங்கங்களில் 100 சதவீத நகைகளை ஆய்வு செய்து தினசரி அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் 100 சதவீத நகைகளை ஆய்வு செய்து தினசரி அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆனால் நகைக்கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரையடுத்து 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் மட்டுமின்றி கூட்டுறவு சங்கங்களால் வழங்கப்பட்டுள்ள அனைத்து நகைக்கடன்களையும் ஆய்வு செய்யுமாறு அனைத்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களில் 100 சதவீத நகைகளை ஆய்வு செய்து நாள்தோறும் அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன் படி,நாள்தோறும் 250 கிராம் முதல் 300 கிராம் வரை நகைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.அதுமட்டுமின்றி, மாவட்டத்தின் பெயர், ஆய்வில் ஈடுபட்ட குழுக்கள் எண்ணிக்கை, ஆய்வு செய்யப்பட்ட நகை, ஆய்வு செய்ய வேண்டிய நகை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து நாள்தோறும் சமர்பிக்க அனைத்து கூட்டுறவு சங்க மண்டல இயக்குனர்கள் மற்றும் மண்டல மேலாளருக்கு, கூடுதல் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.