"பொதுச்சொத்து விற்பனையை எதிர்ப்போம் - முதலமைச்சர் ஸ்டாலின்

பொதுச்சொத்துக்கள் தனியார் மயமாக்கப்படுவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என, சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-02 07:13 GMT
பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  இதன் மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோர், பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை பாதுகாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.  இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பொதுத்துறை நிறுவன சொத்துகள் விற்பனையில் ஊட்டி ரயில்வழித்தடம், தூத்துக்குடி துறைமுகம் ஆகியவையும் அடங்கும் என்றார்.  லாபகரமாக இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைவருடைய சொத்து என்றார். நாட்டின் பொருளாதாரம், வேலை வாய்ப்பு, சிறு குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் ஆணிவேராக பொதுத்துறை நிறுவனங்கள் விளங்குவதாக குறிப்பிட்ட அவர்,மக்கள் நலன் கருதி இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை குத்தகைக்கு விடுவதோ விற்பனை செய்வதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல என தெரிவித்தார். எனவே பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமருக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்