தடம் பதிக்காத தமிழக வீரர்கள் - இனி எதிர்காலத் திட்டம் என்ன?
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் தடம் பதிக்க முடியாதது குறித்தும், இனி எதிர்கால திட்டம் என்ன என்பதையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் இந்தியா 48-வது இடம் பிடித்தது.இந்த ஒலிம்பிக் தொடரில் தமிழகத்தில் இருந்து இதுவரை இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் களம் கண்டனர். அவர்கள் மீது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தமிழக வீரர்கள் பதக்கம் வெல்லாதது ஏமாற்றத்தையே அளித்தது.தமிழகத்தில் இருந்து மொத்தம் 13 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை என்றாலும், இனிவரும் காலங்களில் ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் போட்டிகளில் சாதனை படைப்பார்கள் என பயிற்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.பள்ளிகளில் இருந்தே விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமெனவும், பள்ளிகளில் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர்களுக்கு முறையான உணவு மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறார்கள்.மேலும் மாவட்ட அளவில் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துதல், விளையாட்டு உபகரணங்களை அளித்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டுமென்பது அவர்களது எதிர்பார்ப்பு.