டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரம் - தலைமறைவான ஜெயக்குமாரை பிடிக்க போலீசார் தீவிரம்
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகர் ஜெயக்குமாரை தேடி சிபிசிஐடி போலீசார், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள ஜெயக்குமார் தனது மனைவியின் செல்போனை பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து மனைவியுடன் தலைமறைவாகியுள்ள ஜெயக்குமாரை, பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
தற்போது பிற மாநிலங்களிலும் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சித்தாண்டி இடம் நடத்திய விசாரணையில், டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் நேரடி தொடர்பு இல்லை எனவும், ஜெயக்குமாரிடம் பணம் மட்டுமே கொடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதே போல ஒரு சில, இடைதரகர்களிடம் நடத்திய விசாரணையில் டி.என்.பி.எஸ்.சி மட்டுமல்லாமல் ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் பணம் பெற்று ஜெயக்குமார் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.