அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களுக்கு ரூ 2 ஆயிரம் சிறப்பு ஓய்வூதியம் - தமிழக அரசு அறிவிப்பு
அங்கன்வாடி சத்துணவு அமைப்பாளர்களாக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு மாத சிறப்பு ஓய்வூதியமாக இரண்டாயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையால் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் மற்றும் சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றிய அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்களாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும் என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த அறிவிப்பின் படி, அங்கன்வாடி, சத்துணவு அமைப்பாளர்களாக இருந்து ஊர் நல அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்களாக பணி உயர்வு பெற்றவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் 2000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு 2018 வரை இரண்டாயிரத்து 226 பேர் ஓய்வு பெற்றுள்ளனர் என்றும் அவர்களுக்கு மாதம் 2 ஆயிரம் சிறப்பு ஓய்வூதியம் வழங்குவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 5 கோடியே 44 லட்ச ரூபாய் கூடுதல் செலவினம் ஆகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.