சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த ரவுடிகள் : ஊழியர்களை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு
சென்னை அண்ணாநகர் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து ஊழியர்களை ரவுடிகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்கெட்டில் பணி புரியும் பெண் ஒருவரிடம், தகராறில் ஈடுபட்ட நபர் ஒருவரை, கடையில் இருந்த மேலாளர் கார்த்திக் மற்றும் ஊழியர்கள் வெளியில் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சில மணி நேரம் கழித்து வந்த அந்த நபர் 10க்கும் மேற்பட்ட ஆட்களுடன் வந்து, கார்த்திக் மற்றும் கடையின் உரிமையாளர் செந்திலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டடுள்ளார். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை அகற்றிவிட்டு, கார்த்திக்கை சரமாரியாக தாக்கி, செந்திலை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். தொடர்ந்து கல்லா பெட்டியில் இருந்த 53 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து செந்தில் தன்னிடம் இருந்த சிசிடிவி ஆதாரங்களுடன் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் மீன் சரவணன் என்ற ரவுடி தான், ஆட்களுடன் மிரட்டியதாகவும், இது குறித்து புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் செந்தில் குற்றம் சாட்டியுள்ளார். கடையின் மற்றொரு உரிமையாளர் ரத்னா ரவி வியாபாரிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.