இலங்கை குண்டுவெடிப்பு: சென்னையில் 4 பேரிடம், தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை

இலங்கை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியுடன் தொடர்பில் இருந்ததாக, சென்னையில் 4 பேரிடம், தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-01 01:24 GMT
இலங்கையில் கடந்த வாரம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில், 250க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர் ஒருவர், சமீபத்தில் சென்னை மண்ணடி பகுதிக்கு வந்ததாகவும் அங்கு சிலரை சந்தித்து விட்டு சென்றதாகவும் தேசிய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து மண்ணடியில் உள்ள ஒருவரைப் பிடித்து விசாரித்தபோது, பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையைச் சேர்ந்த 3 பேர் தங்கி இருப்பதாக தகவல் அளித்தார். தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடியாக நுழைந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அங்கிருந்த 3 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு கொடுத்து தங்கியிருந்தது தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து, அவர்களது அறையில் இருந்த பென் டிரைவ், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் கைப்பற்றினர். நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. 

பின்னர், நள்ளிரவு 1;30 மணியளவில் மண்ணடியில் கைதான ஒருவர் மற்றும் பூந்தமல்லியில் தங்கிருந்த 3 பேர் என 4 பேரையும் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்திவிட்டு பலியான ஹாசிமினுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா அல்லது அதற்கு இவர்கள் மூளையாக செயல்பட்டார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்