சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் ஐடி ஊழியர் லேப்டாப் திருட்டு.. சிசிடிவியில் சிக்கிய திருடன்
சென்னையை சேர்ந்த மஞ்சாரி என்கிற இளம் பெண் பெங்களூரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 31 ஆம் தேதி பிருந்தாவன் விரைவு ரயிலில் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தபோது, தன்னுடைய லேப்டாப் பையை ரயில் பெட்டியில் மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, லேப்டாப் பை காணாமல் போனது
தெரிய வந்தது. இது குறித்த புகாரைத்தொடர்ந்து, சென்ட்ரல் ரயில்வே போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் பேக் இல்லாமல் ரயில் நிலையத்தில் உள்ளே செல்வதும், வெளியே செல்லும் நேரத்தில் லேப்டாப் பையுடன் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அவரை கண்காணித்த சென்ட்ரல் ரயில்வே போலீசார், செல்போன் டவர் சிக்னல் மூலமாக அந்த நபர் காட்பாடியில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அப்சர் ஹுசைன் என்கிற நபரை போலீசார் கைது செய்தனர்.