வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையில் திடீர் ஆய்வு : மாவட்ட ஆட்சியர் சோதனை - கோவையில் பரபரப்பு
கோவையில் வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையில் கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை என்ற புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் முடிந்து வாக்கு இயந்திரங்கள் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு பொறியியல கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், 144 கண்காணிப்பு கேமராக்களும் பொறுத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து 10.3 மணியில் இருந்து, பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று, பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஆய்வு மேற்கொண்டார். அதைதொடர்ந்து தொழில்நுட்ப பிரிவினர் 5 மணி நேர முயற்சிக்கு பிறகு செயலிழந்த கண்காணிப்பு கேமராக்கள் மீண்டும் வேலை செய்ய தொடங்கியுள்ளன. பணி முடியும் வரை உடனிருந்த மாவட்ட ஆட்சியர், கேமராக்கள் இயங்குவதை உறுதி செய்த பின்னர் புறப்பட்டார். இதுதொடர்பாக சிசிடிவி கேமராக்கள் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.