பழிவாங்க காத்திருக்கும் "கர்மா" இறுதியை நெருங்கும் உலகக்கோப்பை - யார் வெளியே.. இன்று தீர்ப்பு..!

Update: 2023-11-09 13:15 GMT

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறப்போகும் கடைசி அணி எது என்பதில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இது பற்றி விரிவாக விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்..... 40 போட்டிகள் முடிந்துவிட்டன. பல போட்டிகள் ஒரு தரப்பாக அமைந்தன. சில போட்டிகள் திக் திக் நிமிடங்களுடன் கடைசி நொடி வரை ரசிகர்களை நகம் கடிக்க வைத்தன.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் அரையிறுதியை உறுதி செய்துவிட்டன.

தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ள நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.

இப்போது அரையிறுதிச் சுற்றில் எஞ்சி இருப்பது ஒரு இடம்... அதற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டு உள்ளது.

8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து, தங்கள் கடைசி போட்டியில் இலங்கையுடன் இன்று ஆடுகிறது. ரன் ரேட் பாஸிடிவில் (positive) இருப்பதால் இந்தப் போட்டியில் இலங்கையை வீழ்த்தினால் நியூசிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும். இலங்கையை இன்று வீழ்த்தி பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தங்களின் கடைசி லீக் போட்டியில் தோல்வி அடைந்தால் அரையிறுதிக்கு நியூசிலாந்து சுலபமாக முன்னேறிவிடும். ஒருவேளை இன்றைய ஆட்டம் மழையால் ரத்தானால் நியூசிலாந்துக்கு சிக்கல்தான்...

8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வருகிற 11ம் தேதி நடைபெறும் போட்டியில், இங்கிலாந்தை 130 பிளஸ் எக்ஸ்(130+X) ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். இங்கே X என்பது நியூசிலாந்து இலங்கையை வெல்லும் ரன் வித்தியாசம். ஒருவேளை நியூசிலாந்தும் ஆப்கானிஸ்தானும் தங்களின் கடைசி லீக் போட்டியில் மோசமாக தோற்று, பாகிஸ்தான் இங்கிலாந்திடம் வெற்றி பெற்றால், பாகிஸ்தானின் அரையிறுதிக் கனவு பலிக்கும். மாறாக இங்கிலாந்திடம் தோற்றால் பாகிஸ்தானின் கதை முடிந்தது.

8 புள்ளிகளுடன் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவிடம் முந்தையப் போட்டியில் வெற்றியைப் பறிகொடுத்ததால், அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கிவிட்டது. ரன் ரேட்டும் மைனஸில் (minus) இருப்பது ஆப்கானிஸ்தானுக்கு சிக்கல். நியூசிலாந்தும், பாகிஸ்தானும் தங்களின் கடைசி லீக் போட்டியில் மோசமாக தோற்று, நாளை நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை மிக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே ஆப்கானிஸ்தானால் அரையிறுதிக்குள் கால்பதிக்க முடியும். ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற அதிசயம் அரங்கேற வேண்டும்...

Tags:    

மேலும் செய்திகள்