BREAKING || ஐபிஎல் டிக்கெட் புக்கிங்கில் மெகா மோசடி - ஷாக் நியூஸ்.. ரசிகர்களே உஷார்

Update: 2024-04-07 08:50 GMT

களைகட்டி வரும் ஐபிஎல் மேட்ச் களுக்கு ஆன்லைன் மூலமே டிக்கெட் விற்பனை செய்யப்படுவதால், போலி பிரபல புக்கிங் இணைய தளங்களை உருவாக்கி சைபர் கும்பல் மோசடியை அரங்கேற்றி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒருபுறம் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் , கிரிக்கெட் ரசிகர்களை குதூகலப்படுத்தும் வகையில் ஐபிஎல் மேட்ச்களும் ஆரம்பித்து கோலாகலமாக நடந்து வருகிறது. ஐபிஎல் மேட்ச்சுகள் எந்த மாநிலத்தில் நடந்தாலும் தேடிச்சென்று பார்க்கும் வகையில் வெளிமாநிலத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பலரும் ரசிகர்கள் ஆர்வத்துடன் ஐ பி எல் டிக்கெட்டுகள் எந்த விலையில் கிடைத்தாலும் வாங்கி பார்க்கின்றனர்.

இந்நிலையில் கடந்த காலங்களில் ஐபிஎல் நடக்கும் மைதானத்தைச் சுற்றியுள்ள ஏழை மக்களை பயன்படுத்தி விடிய விடிய காத்திருந்து டிக்கெட் வாங்கி விட்டு, ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த ஐபிஎல் போட்டிகளின் போது டிக்கெட் விற்பனையில் பல்வேறு மோசடிகள் ஏற்பட்ட காரணத்தினால் ஐபிஎல் விளையாட்டு களுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவு செய்தனர்.

இந்த நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சைபர் கிரைம் கொள்ளையர்கள் ஐபிஎல் ரசிகர்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்க புதிய மோசடிகளை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக புகார்கள் சைபர் கிரைம் போலீசாரிடம் பல்வேறு மாநிலங்களில் குவிந்த வண்ணம் உள்ளன.

சினிமா டிக்கெட்டுகள், லைவ் கான்சர்ட் டிக்கெட்டுகள் விற்பனை செய்யும் பிரபல டிக்கெட் விற்பனை இணையதளமாக புக் மை ஷோவின் பெயரில் இரண்டு போலியான இணையதளங்களை உருவாக்கி அதில் ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக சைபர் கிரைம் கும்பல்கள் பணத்தை மோசடி செய்துள்ளனர்.

Book.myshow-premium.net மற்றும் bookmyshow.cloud என்ற போலியான இணையதளங்களை உருவாக்கி ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களின் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர். ஐபிஎல் மேட்ச்சுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதால், டிக்கெட்டுகளையும் முன்கூட்டியே முன்பதிவு செய்யலாம் என இயர்லி பேர்ட்(early bird) என்ற சலுகை மூலமும், சிறப்பு தள்ளுபடி என்ற பெயரிலும் ஐபிஎல் ரசிகர்களை கவர்ந்து டிக்கெட்டுகள் மோசடியாக விற்பனை செய்யப்படுவதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் பல்வேறு விதமான நூதன முறை விளம்பரங்கள் ஆகியவற்றை தெரிவித்து ஐபிஎல் டிக்கெட்டுகள் சலுகை வழியில் விற்பனை செய்யப்படுவதாகவும் ஏமாற்றியுள்ளனர். குறிப்பாக சென்னையில் ஐபிஎல் ரசிகர்கள் அதிகமாக இருக்கிற காரணத்தினால் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தோனி உள்ளிட்ட விளையாட்டு வீரர்களை அருகில் பார்க்கும் வகையில் டிக்கெட் உள்ளதாக கூறி பலரிடமும் பெரிய அளவிலான தொகையை மோசடி செய்ததுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இடிக்கப்பட்ட ஸ்டாண்டுகளிலும், விஐபி டிக்கெட்டுகள் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

கடைசியாக நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் விளையாட்டுகளின் டிக்கெட் களை அதிகளவு மோசடி செய்து விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்த விளையாட்டின் போது ஆயிரக்கணக்கான ரூபாய் ஆன்லைனில் புக் செய்து பலருக்கும் அனுமதி கிடைக்கவில்லை என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு டிக்கெட் ஏமாந்தவர்கள் போலி இணையதளங்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கி மோசடிக்கு உள்ளாகி இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சென்னை மற்றும் ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . குறிப்பாக ஐபிஎல் டிக்கெட்டுகளை குறைந்த அளவுக்கு அல்லது அதிக அளவிற்கு வாங்குபவர்கள் ஆன்லைன் இணையதளங்களை சரிபார்த்து டிக்கெட்டுகளை வாங்குமாறு அறிவுரை தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் சலுகைகளில் டிக்கெட்டுகள் தருவதாக கூறும் நபர்களை நம்பியோ அல்லது இல்லாத சலுகைகளை கொடுத்து ஏமாற்றுவதாக விளம்பரம் செய்யும் ஆன்லைன் இணையதளங்களை நம்பியோ ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்