வங்கதேசத்தை காலி செய்த இந்தியா.. ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய மகளிர் அணி
இலங்கையின் தம்புல்லா நகரில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியும் வங்கதேச மகளிர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் இந்திய மகளிர் அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேச மகளிர் அணி ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச மகளிர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் ரேணுகா சிங் மற்றும் ராதா யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 81 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய மகளிர் அணி, விக்கெட் இழப்பின்றி 11வது ஓவரில் இலக்கை எட்டியது. ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்து அசத்தினார். அரையிறுதி ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.