உலக நாட்டு தலைவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய கலைப்பொருட்களை பரிசாக வழங்குவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் லாவோசில் தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு லடாக்கிலிருந்து அலங்கார பானையுடன் கைவினைப்பொருளால் செய்யப்பட்ட குறைந்த உயர மேஜையை பரிசாக அளித்தார். லாவோஸ் அதிபர் தோங்லோன் சிசோலித்துக்கு தமிழ்நாட்டிலிருந்து அழகிய வேலைபாடு கொண்ட பழங்கால பித்தளை புத்தர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு மேற்கு வங்கத்தில் உருவாக்கப்படும் வெள்ளி மயில் சிற்பத்தை பரிசளித்தார். நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுக்கு மகாராஷ்டிராவில் தயாரிக்கப்படும் அழகிய வேலைப்பாடு கொண்ட வெள்ளி விளக்குகளை வழங்கினார். லாவோஸ் பிரதமர் சோனெக்சே சிபாண்டோனுக்கு வண்ணம் பொறிக்கப்பட்ட புத்தர் சிலையை பரிசளித்தார். அவரது மனைவிக்கு ராதா-கிருஷ்ணா உருவம் செதுக்கப்பட்ட மலாக்கிட் படிகம் மற்றும் ஒட்டக எலும்புப் பெட்டியை பரிசாக வழங்கினார்.