வீட்டில் மனைவி காத்திருக்க சிறுமி மீது 4வருட மோகம்... காட்டுக்குள் அழைத்து உயிரோடு கொளுத்திய அரக்கன்
ஆந்திராவில், ஒருதலைக் காதல் விவகாரத்தில் +2 மாணவி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவியை, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் விக்னேஷ் என்பவர், கடந்த 4 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து நிலையிலும், தொடர்ந்து அந்த மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட விக்னேஷ், நீ இல்லாமல் தன்னால் உயிரோடு இருக்க முடியாது என்றும், உன்னுடன் பேச வேண்டும் என்றும் கூறி, ஊருக்கு வெளியில் உள்ள காட்டுப் பகுதிக்கு மாணவியை வரவழைத்துள்ளார்.
இதையடுத்து இருவரும் காட்டுப் பகுதியில் பேசிக் கொண்டிருந்தபோது, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக தெரிகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டபோது ஆவேசம் அடைந்த விக்னேஷ், திடீரென தன்னிடமிருந்த சிகரெட் லைட்டரை எடுத்து, மாணவியின் ஆடையில் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஆடையில் தீப்பற்றி எரிந்ததால் மாணவி அலறித் துடித்தார். காட்டுப்பகுதியில் இருந்து உதவி கேட்டு எழுப்பிய அபயக் குரல், சாலையில் சென்ற பொதுமக்களுக்கு கேட்டுள்ளது.
இதையடுத்து அங்கு சென்று பொதுமக்கள் பார்த்தபோது மாணவி தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கடப்பா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். 80 சதவீத தீக்காயத்துடன் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அதில், 8ம் வகுப்பு படித்தது முதல் விக்னேஷ் தன்னை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், வேறொரு பெண்ணை திருமணம் செய்ததாக தெரிவித்தார். இதன்பின்னரும், தான் இல்லாவிட்டால் செத்துவிடுவதாக மிரட்டி விக்னேஷ் தனக்கு காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார். செத்து விடுவேன் என்று விக்னேஷ் கூறியதால், பாவம் என்று கருதி, அவர் அழைத்த இடத்திற்கு சென்றபோது, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று தீ வைத்தது குறித்து மாணவி வாக்குமூலம் அளித்தார். இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்த நிலையில், தப்பி ஓடிய குற்றவாளியை உடனடியாக கைது செய்ய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில், 4 தனிப்படைகளை அமைத்த போலீசார் குற்றவாளி விக்னேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.