ஏழை மாணவர்கள் மீதான வெறுப்புணர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
ஏழை மாணவர்கள் மீதான வெறுப்புணர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஏழை மாணவர்கள் மீதான வெறுப்புணர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரியை சேர்ந்த மாணவியின் தாய் தொடர்ந்த வழக்கில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது என மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது, கல்வியின் தரத்தைப் பாதிக்கும் என்ற மத்திய அரசின் வாதம் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என கூறியுள்ளார்.புதுச்சேரி மாநில அரசு வழங்க முன்வந்துள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டை தடுத்து நிறுத்திட, அம்மாநில துணைநிலை ஆளுநருடன் சேர்ந்து மத்திய பாஜக அரசு சூழ்ச்சி செய்வதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இதன்மூலம் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போராடி பெற்ற 7.5 சதவீத இடஒதுக்கீட்டை சீர்குலைக்க மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மருத்துவக் கல்வி கற்க வேண்டும் என்று கருதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மீது இருக்கும் வெறுப்புணர்வை கைவிட்டு, இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.