பொதுப்பிரிவினருக்கு 10 % இடஒதுக்கீடு மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேறியது
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதைதொடர்ந்து, இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. அதிமுக, திமுக, ராஷ்டிரிய ஜனதாதளம், பிஜு ஜனதாதளம் ஆகிய கட்சிகள், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் விவாதம் முடிவடைந்த நிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, மசோதாவுக்கு ஆதரவாக 165 உறுப்பினர்களும், எதிராக 7 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு பிறகு இடஒதுக்கீடு அமல் : கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு கிடைக்கும்
குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தவுடன், இந்த இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வரும். இந்த மசோதாவின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற முடியும். இந்த இடஒதுக்கீட்டை பெற, ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.