முதல்நாள் வீடியோ காலில் கொஞ்சி விளையாடிய மகள் விடிந்ததும் மண்ணுக்குள் - அனாதையாக பரிதவிக்கும் தமிழர்

Update: 2024-08-06 08:34 GMT

"ஐயா..பொண்ணு முகத்தையாவது காட்டுங்க"

முதல்நாள் வீடியோ காலில் கொஞ்சி

விளையாடிய மகள் விடிந்ததும் மண்ணுக்குள்

அனாதையாக பரிதவிக்கும் தமிழர்

நிலச்சரிவு ஏற்பட்ட கேரள மாநிலம் சூரல் மலையில் மண்ணில் புதைந்த கூடலூரை சேர்ந்த மாணவிக்கு அவர் படித்த பள்ளியில் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவிக்கப்பட்டது... ஏற்கனவே மனைவியை இழந்து மகள் மட்டுமே இருந்த நிலையில் இப்போது மகளையும் இழந்ததால் துக்கம் தாளாமல் சிறுமியின் தந்தை கண்ணீர் விட்டு அழுதது கலங்கச் செய்தது...

மண்ணில் புதைந்த தன் மகளின் முகத்தையாவது பார்க்க உதவுங்கள் என 3 தினங்களுக்கு முன்புதான் நம்மிடம் கண்ணீர் விட்டுக் கதறியழுதார் சாமிதாசன்...

ஆனால் நிலச்சரிவின் கோரத்தால் உடல் இன்னும் கிடைத்தபாடில்லை...

நீலகிரி மாவட்டம் பந்தலூர் எருமாடு கோட்டூரில் வசித்த சாமிதாசன் தமிழக கேரள எல்லையில் மரவள்ளிக் கிழங்கு வியாபாரம் செய்து வந்தார்....

இவர் ஈரோட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்... இவரது மனைவி சூரல் மலையைச் சேர்ந்தவர்... காதல் திருமணத்தின் அடையாளமாய் அழகாய் ஒரு பெண் தேவதை...

புற்றுநோய் எனும் அரக்கனால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மனைவியை இழந்த சாமிதாசன்...குழந்தை ஆனந்திகாவை தானே வளர்த்து வந்தார்...

ஆனந்திகா எருமாடு பகுதியில் உள்ள மாரடி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது சாமி தாசனுக்கு அங்குள்ள நிறுவனத்தில் காவலாளியாக பணி கிடைத்துள்ளது...

சாமிதாசன் பணிக்குச் செல்லும்போது ஆனந்திகா மட்டும் தனியே இருக்க நேரிடும் என்பதால் குழந்தையை சாமிதாசனின் மாமனார் மாமியார் பார்த்துக் கொள்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர்...

படிப்பிலும், விளையாட்டிலும், இதர கலைகளிலும் படு சுட்டி ஆனந்திகா..

சூரல் மலையில் ஆனந்திகா படித்து வந்த நிலையில், நிலச்சரிவுக்கு முதல் நாள் தான் தந்தை சாமி தாசனுடன் வீடியோ காலில் உற்சாகமாக பேசியுள்ளார்...

அதன்பிறகு நிலச்சரிவு சூரல் மலையைப் புரட்டிப் போட்ட நிலையில் ஆனந்திகா வசித்த வீட்டைப் பார்க்கச் சென்ற சாமிதாசன் வீடு மண்ணோடு மண்ணானதைக் கண்டு அதிர்ந்து போனார்...

ஆனந்திகா, தன் மாமனார், மாமியார் அனைவரையும் நிலச்சரிவில் இழந்த சாமிதாசன் அவர்களின் உடல்களைத் தேடிக் கொண்டே கண்ணீருடன் சுற்றி வந்தார்...

ஆனால் இதுவரை மண்ணில் புதைந்த அவரது மகள் இன்னும் கிடைக்காத நிலையில்...ஆனந்திகா நீலகிரியில் படித்த பள்ளியில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது...

தலைமை ஆசிரியர் அஷ்ரப், ஆசிரியர்கள், சக மாணவ மாணவிகளுடன் தந்தை சாமிதாசனும் ஆனந்திகாவின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்...

மகளின் முகத்தையாவது கடைசியாக பார்க்க மாட்டோமா என நம்மிடம் அழுத சாமிதாசன் ஆனந்திகாவின் புகைப்படத்தைப் பார்த்துக் கதறி அழுதது நம்மை உலுக்கி விட்டது...

மனைவியையும் இழந்து தனக்கென துணையாய் இருந்த மகளையும் நிலச்சரிவில் இழந்து தனிமரமாய் நிற்கும் சாமிதாசனின் கதை பெரும் சோகத்தில் ஆழ்த்துகிறது...

Tags:    

மேலும் செய்திகள்