"இவர் வேலை பாக்குற ஸ்கூல்ல தான் படிப்பேன்".. ஒற்றை காலில் நின்று மாறிய மாணவர்கள்..
தெலங்கானாவின், மஞ்சேரி மாவட்டத்தில், பொனகல் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 12 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் 53 வயதான ஸ்ரீனிவாசன்.. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இவர் பாடம் எடுத்து வந்திருக்கிறார்.
பள்ளியில் மாணவர்களின் மீது அக்கறையாகவும், அன்பாகவும் இருந்து வந்துள்ளார் இவர். அவரது வகுப்பில் மாணவர் ஒருவர் பள்ளிக்கு வரவில்லையென்றாலும், பெற்றோர்களை அழைத்து கனிவோடு விசாரிப்பாராம். மாணவர்கள் வகுப்பறையில் சோர்வாக இருந்தால், உடனே அதற்குண்டான காரணத்தைத் தெரிந்துகொண்டு அதைச் சரிசெய்ய முயற்சிப்பாராம்.
இப்படியாக பலவிதங்களிலும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இடையே நல்ல பரஸ்பர உறவில் இருந்துவந்துள்ளார் ஸ்ரீனிவாசன். இதனால் ஆசிரியர் ஸ்ரீவாசனை கொண்டாடி வந்திருக்கின்றனர் மாணவர்களும், பெற்றோரும்..
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆசிரியர் ஸ்ரீனிவாசனுக்கு அக்காபெல்லிகுடா என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கு இடமாறுதல் கிடைத்திருக்கிறது. தற்போது வேலைசெய்யும் பள்ளியிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அவர் மாறுதலான பள்ளி உள்ளது. ஆனால் ஆசிரியர் ஸ்ரீனிவாசனுக்கு வேறு பள்ளிக்குச் செல்ல விருப்பமே இல்லை. இருப்பினும், அரசு உத்தரவை மீற முடியாத நிலை.