தமிழன்னைக்கு அனுமதி தராமல் ரக்ஷாவுக்கு அனுமதி.. கொந்தளிக்கும் தமிழக விவசாயிகள்
முல்லை பெரியாறு அணையில் கேரள போலீசாருக்கு 150 எச்பி திறனில் "மீட்பு" விரைவு படகு வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
1982 முதல் பெரியாறு அணை பாதுகாப்பில் கேரள போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அணைப்பகுதியில் காவல்நிலையம் உள்ள நிலையில், 60 பேர்கள் மாற்றுப்பணியாக வள்ளக்கடவு, வண்டிப்பெரியார் காவல் நிலையங்களில் பணியில் உள்ளனர். அணை பாதுகாப்பு போலீசாருக்காக இருந்த 2 படகுகளில் ஒன்று பழுதானதால், தற்போது 14 பேர்கள் பயணிக்கும், 150 எச்பி திறன் கொண்ட புதிய விரைவு படகு வழங்கப்பட்டது. ரக்ஷா என பெயரிடப்பட்ட இந்த படகு, தேக்கடி படகுத்துறையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இடுக்கி மாவட்ட எஸ்பி விஷ்ணு பிரதீப், கொடி அசைத்து தொடங்கிவைத்தார். அதே நேரத்தில், தமிழன்னை படகுக்கு இன்னும் கேரள அரசு அனுமதி தராத நிலையில், கேரள போலீசாருக்கு புதிய படகு வழங்கி, அனுமதி வழங்கியுள்ளதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.