கேரளாவின் திருவனந்தபுரம், வஞ்சியூரை சேர்ந்தவர் ஷினி. கனமழையின் போது, ரெயின் கோட் அணிந்து இவரது வீட்டிற்கு வந்த பெண் ஒருவர், கொரியர் வந்திருப்பதாக கூறி ஷினியை அழைத்துள்ளார். இதில், வீட்டை விட்டு வெளியே வந்த ஷினியை அவர் 3 முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கையில் படுகாயமடைந்து ஷினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பெண்ணை துப்பாக்கியால் சுட்டது, கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவராக பணியாற்றி வரும் தீப்திமோல் ஜோஸ் என்பது தெரியவந்தது. ஷினியின் கணவர் சுஜித்துடன் தீப்திமோல் ஜோஸ் தகாத உறவில் இருந்து வந்த நிலையில், திடீரென உறவை சுஜித் முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரின் மனைவியை தீப்திமோல் ஜோஸ் துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்தது. இதற்காக ஆன்லைன் மூலம் துப்பாக்கி ஒன்றை வாங்கிய தீப்திமோல் ஜோஸ், யூடியூப் பார்த்து துப்பாக்கி சுடக் கற்றுக் கொண்டதும் தெரியவர, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.