“அம்பானி வீட்டு கல்யாணம்னா இப்படியா?’’ - 6 டூ 140 ஒரேநாளில் மாறிய தலையெழுத்து... ஜாம்நகர் ஏர்போர்டால் வெடித்த சர்ச்சை?
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்வில் பங்கேற்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபலங்கள் தொடர்ந்து குஜராத்தில் உள்ள ஜாம்நகர் விமான நிலையத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். சர்வதேச விருந்தினர்களை அழைத்து வருவதற்காக நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், பாரீஸ், இத்தாலி, கத்தார், பூடான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சர்வதேச விமானங்கள் ஜாம் நகருக்கு வருகின்றன. பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை ஜாம்நகர் விமான நிலையம் பல்வேறு சர்வதேச விருந்தினர்களை வரவேற்க இருப்பதன் காரணமாக 10 நாள்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக 6 விமானங்கள் மட்டுமே வந்து செல்லும் நிலையில் நேற்றைய தினம் மட்டும் ஒரே நாளில் சுமார் 140 விமானங்களை ஜாம்நகர் விமான நிலையம் கையாண்டுள்ளது. இதனிடையே 10 நாள்கள் நடக்கும் அம்பானி இல்ல விழாவுக்காக ஜாம்நகர் விமான நிலையத்துக்கு சர்வதேச தகுதி வழங்குவதா என்ற ரீதியில் பல்வேறு தரப்பில் விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.