ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய தமிழ்நாடு...பேராபத்தே கோவைக்கு தானாம் - இஸ்ரோவின் `பேரழிவு ரெட் ஜோன்’ லிஸ்ட்
ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய தமிழ்நாடு
பெரிய ஆபத்தே கோவைக்கு தானாம்
இஸ்ரோவின் `பேரழிவு ரெட் ஜோன்’ லிஸ்ட்
அன்றே கணித்தும் ஏன் அலட்சியம்?
டாப் லிஸ்டில் 6 தமிழக மாவட்டம்
நாட்டையே உலுக்கியுள்ள வயநாடு நிலச்சரிவு குறித்து கடந்த ஆண்டே இஸ்ரோ எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், எச்சரிக்கையை கண்டு கொள்ளாதது தான் பேரழிவுக்கு காரணமா ? என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
மண்ணோடு மண்ணாக மாயமான கிராமங்கள், கொத்து கொத்தாய் கிடக்கும் மக்களின் பிணங்கள், சேறும் சகதியுமாய் நிறைந்துள்ள பகுதிகள் என வயநாடு முழுவதும் ஒலிக்கிறது மரண ஓலம்...
அதிகாலை வேளையில் ஏற்பட்ட நிலச்சரிவால் பல உயிர்கள் மண்ணுக்குள் மாண்டு கிடக்கும் சூழலில், இந்த பேராபத்தை யாரும் எதிர்பார்க்கவில்லையே என்பது அப்பகுதி மக்களின் அவலக்குரலாக உள்ளது..
ஆனால் இந்த ஆபத்து குறித்து கடந்த ஆண்டே எச்சரித்துள்ளதாக கூறுகிறது இஸ்ரோ ஆராய்ச்சி மையம்..
இஸ்ரோவின் என்.ஆர்.எஸ்.சி. எனப்படும் தேசிய தொலைநிலை உணர்தல் மையம் அமைப்பின் தரவுகள் இதனை அம்பலப்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர், இந்திய செயற்கைக்கோள் தரவுகள் அடிப்படையில் பேரிடர் அபாயம் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அதன் படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் 147 மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது..
குறிப்பாக கேரள மாநிலத்தின் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பதை செயற்கைக் கோள் படத்துடன் விளக்கிய என்.ஆர்.எஸ்.சி. ஆய்வு மையம் நிலச்சரிவு அபாய பட்டியலில் இந்தியாவில் 13வது இடத்தில் வயநாடு இருப்பதாக பதிவு செய்திருந்தது..
அத்துடன் மலைகளில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு கனமழை, நிலநடுக்கம் போன்ற இயற்கை காரணங்கள் மட்டுமன்றி சாலைகள், கட்டுமானம், சுரங்கம், போன்ற மனித நடவடிக்கைகளும் முக்கிய காரணமாக அமைவதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் பருவமழைக்காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களிலேயே அதிக நிலச்சரிவுகள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிலச்சரிவுகள் 85.3 சதவீதம் இமயமலையிலும் 66.5 சதவீத இமயமலையின் வட மேற்குப் பகுதியிலும் , வடகிழக்கு இமயமலையில் 18.8 சதவீத என கண்டறியப்படுவதாகவும் , இவை தவிர மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 14.7 சதவீதம் நிலச்சரிவுகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகத்தில் 690 இடங்கள், கேரளத்தில் 6 ஆயிரத்து 39 இடங்கள் , கர்நாடகத்தில் ஆயிரத்து 94 இடங்கள் நிலச்சரிவு ஏற்படும் அபாய இடங்களாக இஸ்ரோவின் NRSC அமைப்பால் கண்டறியப்பட்டுள்ளன.
இதை விட திகிலூட்டும் தகவல் என்னவென்றால், நிலச்சரிவு அபாயம் உள்ள 147 மாவட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த கோவை மாவட்டம் 36வது இடத்திலும், திண்டுக்கல் மாவட்டம் 41வது இடத்திலும், குமரி மாவட்டம் 43வது இடத்திலும், நெல்லை மற்றும் தென்காசி 72வது இடத்திலும், நீலகிரி மாவட்டம் 85வது இடத்திலும் உள்ளன.
தென் மாநிலங்களைவிட வடகிழக்கு மாநிலங்களில் அதிக நிலச்சரிவு ஏற்பட்டாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மக்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் உயிரிழப்பு அபாயம் தென்மாநிலங்களுக்கே அதிகம் இருப்பதாக எச்சரித்துள்ளது.
சென்றாண்டு நிலச்சரிவு குறித்து எச்சரிக்கையை இஸ்ரோ விடுத்தும் மத்திய மாநில அரசுகள் ஆய்வறிக்கை குறித்து உரிய நடவடிக்கையும் வழிகாட்டுதலையும் மேற்கொள்ளாதது தற்போதைய பேரிடருக்கு காரணமாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கேரளாவின் வயநாடு பகுதியில் நிலவிய அடர்வுமிக்க கருமேகங்கள் சற்றே நகர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி பகுதியில் பெருமழையாக பொழிந்து இருந்தால் தமிழகத்தின் நிலைமையும் மோசமாகி இருக்கும் என வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் ...
எனவே வரும் நாட்களில் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் பேரிடர்களை சமாளிக்க போதிய கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்வது அவசியமானது எனவும் வல்லுனர்கள் தரப்பில் தகவல் முன்வைக்கப்படுகிறது..