"மனைவியிடம் கட்டாய உடலுறவு பாலியல் கொடுமைக்கு சமம்" - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெங்களூருவில் வசிக்கும் பெண் ஒருவர், கணவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கடந்த 2017ம் ஆண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

Update: 2022-03-24 10:24 GMT
பெங்களூருவில் வசிக்கும் பெண் ஒருவர், கணவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கடந்த 2017ம் ஆண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து, கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், 2018ம் ஆண்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதற்கிடையே, செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அந்த பெண்ணின் கணவர், தாங்கள் இருவரும் கணவன் - மனைவி என்பதால், இதனை பாலியல் வன்கொடுமை வழக்காக கருதக் கூடாது என்றும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரினார். மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், மனைவியிடம் கட்டாய உடலுறவு என்பது வன்கொடுமைக்கு சமம் என குறிப்பிட்டு, பாலியல் வன்கொடுமை வழக்காகவே இது எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, கணவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், திருமண பந்தம் என்ற பெயரில் மனைவியை அடிமையாக கருத முடியாது என்றும், செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த உத்தரவு சரியானதுதான் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
Tags:    

மேலும் செய்திகள்