சிறிய அளவில் தொடங்கப்பட்ட கட்சியின் விஸ்வரூபம் ! - ஆம் ஆத்மி கடந்து வந்த பாதை

பஞ்சாப்பில் முதல் முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி, 2012இல் சிறிய அளவில் டெல்லியில் தொடங்கப்பட்டு, இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஆம் ஆத்மி கடந்து வந்த பாதையை இந்தத் தொகுப்பு விவரிக்கிறது.

Update: 2022-03-11 04:36 GMT
2011இல் அன்னா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிரான பேரியக்கம் ஒன்று உருவாக்கப்பட்டு, ஜன் லோக் பால் மசோதாவிற்காக டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடந்தன. அன்னா ஹசாரேவின் தளபதிகளில் ஒருவராக உருவெடுத்த, முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அர்விந்த் கேஜ்ரிவால், ஒரு கட்டத்தில் அந்த இயக்கத்தை அரசியல் கட்சியாக மற்ற முடிவெடுத்தார். இதற்கு அன்னா ஹசாரே உடன்படாததால், 2012 நவம்பர் 26இல் டெல்லியில் ஆம் ஆத்மி என்ற கட்சியை அரவிந்த் கேஜ்ரிவால் தொடங்கினார். இந்தியா முழுவதும் ஏராளமான சமூக செயல்பாட்டாளர்களும், அறிவுஜீவிகளும், ஆர்வலர்களும், பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்களும் ஆம் ஆத்மியில் ஆர்வத்துடன் இணைந்தனர். கட்சி தொடங்கப்பட்ட ஒரு ஆண்டில், நாடு முழுவதும் இருந்து இணையம் மூலமும், வங்கிகள் மூலமும் சுமார் 20 கோடி ரூபாய் நன்கொடை குவிந்தது. மற்ற கட்சிகளை போலல்லாமல் ஆம் ஆத்மியின் வரவு செலவு கணக்குகள் அனைத்தும் உடனுக்குடன் இணையம் மூலம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. 2013 டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் களமிறங்கிய ஆம் ஆத்மி, 69 இடங்களில் போட்டியிட்டு, 29 சதவீத வாக்குகளை பெற்று 28 இடங்களில் வென்று, இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வாராக பதவியேற்றார். லோக் பால் எனப்படும் ஊழல் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் ஆதரவளிக்காததால், 49 நாட்களில் முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து 2015 பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில், 54.3 சதவீத வாக்குகள் பெற்று 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி ஆட்சியமைத்தது. ஐந்தாண்டு ஆட்சியில் கட்சியின் செல்வாக்கு உயர்ந்ததன் விளைவாக, 2020 டெல்லி சட்டமன்ற தேர்தலில், 53.57 சதவீத வாக்குகள் பெற்று, 62 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது ஆம் ஆத்மி. 2014 மக்களவை தேர்தலில் 4 இடங்களையும், 2019 மக்களவை தேர்தலில் ஒரு இடத்தையும் வென்றது. 2017 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் 112 இடங்களில் போட்டியிட்டு, 23.7 சதவீத வாக்குகளை பெற்று, 20 இடங்களில் வென்று பிரதான எதிர்கட்சியாக உருவெடுத்தது. 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில், 90/ 91/ 92/ 93/ 95 இடங்களில் வென்று, முதல் முறையாக ஆட்சியமைக்க உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்