சந்திரயான் 2 பயணம் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...
பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவுக்கு 1969ஆம் ஆண்டு மனிதனை அனுப்பி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது அமெரிக்கா.
பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவுக்கு 1969ஆம் ஆண்டு மனிதனை அனுப்பி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது அமெரிக்கா. அதற்கு முன்பாகவே விண்வெளித்துறையில் பல சாதனைகளை எட்டிய ரஷ்யா, விண்கலங்களை நிலவுக்கு அனுப்பியது. ஆனால் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை ரஷ்யாவால் வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை.
நிலவில் ஆராய்ச்சி செய்தவற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டியிருப்பதால் அதுகுறித்த ஆராய்ச்சியை உலக நாடுகளும் தள்ளியே வைத்திருந்தது. இந்த சூழலில் தான் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவு பற்றிய ஆராய்ச்சியில் போட்டா போட்டி நிலவி வருகிறது. நிலவின் மீதான ஆராய்ச்சியின் முதல் கட்டமாக 2008 ஆம் ஆண்டு சந்திரயான் 1 விண்கலத்தை அனுப்பி உலக அரங்கில் தடம் பதித்தது இந்தியா. 2 ஆண்டுகளாக ஆய்வு நடத்திய சந்திரயான் 1 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து தன் பயணத்தின் வெற்றிக்கு பெருமை சேர்த்தது.
இதைத் தொடர்ந்து 293 நாட்களில் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் சந்திரயான் 1 தன் ஆய்வை நிறுத்திக் கொண்டது. இருந்த போதிலும் நிலவை சோதனை செய்ய சென்ற சந்திரயான் 1, 95 சதவீதம் வெற்றி இலக்கை எட்டியதாக மகிழ்ச்சி தெரிவித்தனர் நம் விஞ்ஞானிகள். இதை அறிந்த சீனா, இந்த ஆண்டு ஜனவரி மாதம், நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. பருத்தி விதையுடன் சென்ற விண்கலம், அதை நிலவில் தூவி, அங்கு தாவரங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதையும் கண்டுபிடித்து அசத்தியது. தொடர்ந்து 2025ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியிலும் சீனா தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால் அதற்கும் மேலாக கடநத் ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது இந்தியா. விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், அதேநாளில் புவிவட்டப்பாதையிலும் நிலைநிறுத்தப்பட்டது.
அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு நிலையாக அதிகரிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 4ஆம் தேதி சந்திரயான் 2ல் இருந்த விக்ரம் லேண்டர் கருவியானது, பூமியை படம் பிடித்தது. இது உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்ற ஒரு நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. ஆகஸ்ட் 14ஆம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து நிலவு ஈர்ப்பு பகுதிக்கு சந்திரயான் 2 மாற்றும் பணி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 26ஆம் தேதி 2 வது முறையாக நிலவை படம் எடுத்து அனுப்பியது சந்திரயான் 2.
செப்டம்பர் 2ஆம் தேதி ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்றது. விஞ்ஞானிகள் எதிர்பார்த்த அத்தனை இலக்கையும் சரியாக செய்து உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது சந்திரயான் 2. செப்டம்பர் 3ஆம் தேதி நிலவின் தென் துருவ பகுதி நோக்கி விக்ரம் லேண்டர் கருவி நகர்ந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் தன் இலக்கை நெருங்கியது. சீனா நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய செலவு 5 ஆயிரத்து 759 கோடி ரூபாய். ஆனால் இந்தியாவோ வெறும் 978 கோடி ரூபாய் செலவில் உருவாக்கி இருக்கிறது.
நிலவுக்கு வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் ஆர்பிட்டரானது 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கழுகுப் பார்வையில் நிலவின் தரைப்பகுதியை ஆய்வு செய்து பூமிக்கு அனுப்பும். இதற்காக ஆர்பிட்டரில் துல்லியமாக படம் பிடிக்கும் கேமரா, தனிமங்களை கணக்கிடும் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், உறைபனியை படம் எடுக்கும் நவீன கேமரா, துருவப் பகுதிகளை படம் எடுக்கும் கேமரா, வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் எக்ஸ்புளோரர் 2 உள்ளிட்ட பல்வேறு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.