உலக புகழ்பெற்ற தமிழக கோவிலில் பெண் ஏட்டய்யா செய்த கேவலம்.. மொத்த காவல்துறைக்கும் களங்கம்

Update: 2024-11-27 04:40 GMT

பிரசித்தி பெற்ற ஒரு கோயிலின் உண்டியல் காணிக்கையை, திருடிய பெண் தலைமை காவலர் உள்ளிட்டோரை, பொதுமக்கள், செய்தியாளர்கள் என யாருடைய கண்ணிலும் சிக்காமல் இரவோடு இரவாக தப்பிக்க வைத்த சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பார்க்கலாம்..விரிவாக..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி ஆலயத்தில் தான், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

புகழ்பெற்ற இந்த கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வழக்கம் போல, இந்த மாதமும் நடைபெற்றது. அறநிலையத்துறை மூலம் கோவில்பட்டியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு மூலம் 100-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, குவியல் குவியலாக அங்கு குவிக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளையும் பிரித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் மகேஸ்வரி மற்றும் அவருடன் வந்திருந்த முத்துலட்சுமி, மாரியம்மாள், அனிதா ஆகியோரும் ஈடுபட்டிருந்தனர்.

நேரம் ஆக..ஆக.. தலைமை காவலர் மகேஸ்வரி உள்ளிட்ட 4 பேரின் மீது கோயில் நிர்வாகத்தினருக்கு சந்தேகம் ஏற்படவே, 3 பேரையும் தீவிரமாக அதிகாரிகள் நோட்டமிட்டனர்.

கையில் எண்ணுவதற்காக எடுத்த பணத்தை.. எண்ணி முடித்த கையோடு அப்படியே,, திடீரென பணத்தை தனது ஆடைக்குள் நாசுக்காக வைத்த போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகிகள், இது குறித்து எழுப்பிய கேள்விகளுக்கும் நால்வரும் மழுப்பலாகவே பதிலளித்துள்ளனர்.

தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மற்ற 2 பெண் காவலர்களையும் திருக்கோயில் அலுவலகத்துக்கு உள்ளேயே வைத்து நீண்ட நேரமாக விசாரணை செய்யப்பட்டிருக்கிறது.

பெண் காவலர் மகேஸ்வரி உள்ளிட்ட 4 பேரையும் அதிகாரிகள் பிடித்துக் கொடுத்தும், ரொம்ப நேரமாகியும் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கு மாறாக, போனில் பறந்து வந்த உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதைப் போல, அங்கு... துடித்துக் கொண்டிருந்த மற்ற 2 காவலர்களும், தலைமை காவலர் மகேஸ்வரி உள்ளிட்ட 4 பேரையும் காப்பாற்றி விடும் முயற்சியில் மும்முரமாக செயல்பட்டதாக தெரியவருகிறது.

திருட்டில் ஈடுபட்டது காவல்துறையை சார்ந்த நபர் என்பதால் தலைமை காவலர் மகேஸ்வரியை செய்தியாளர்கள் வீடியோவோ, போட்டோவோ எடுக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

அங்கு சென்ற செய்தியாளர்களையும் உள்ளே விடாமல், நள்ளிரவு வரை காத்திருந்து, யாருடைய கண்ணிலும் படாமல் சக காவலர்கள் புடை சூழ, தலைமை காவலர் மகேஸ்வரி உள்ளிட்ட 4 பேரும் ரகசியமாக கோயிலின் பின் வாசல் வழியாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதற்கு, சில கோயில் நிர்வாகிகளும் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்பிறகே, கோயிலின் நடை அவசரம் அவசரமாக சாற்றப்பட்டுள்ளது. கோயிலில் உண்டியல் காணிக்கையை திருடிய பெண் காவலர் உள்ளிட்ட நால்வரையும், சக காவலர்களே காத்திருந்து அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றபோது, அங்கு மகளிர் காவல் நிலைய கதவுகளை அவசர அவசரமாக பூட்டிக்கொண்டதோடு, யாரையும் உள்ளே வரக்கூடாது என பெண் காவலர் ஒருவர் தடுத்து நிறுத்திய சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்