70-வது குடியரசு தினம் உற்சாக கொண்டாட்டம் : தேசிய கொடி ஏற்றி வைத்தார் ராம்நாத் கோவிந்த்
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி அஞ்சலி :
நாட்டின் 70-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அமர்ஜவான் ஜோதியில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.
முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிட்டார் ராம்நாத் கோவிந்த் :
இதனைத்தொடர்ந்து ராஜபாத் சென்ற குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகள் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா கலந்துகொண்டார். பின்னர் 21 குண்டுகள் முழங்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
நசீர் அகமது வாணிக்கு அசோக் சக்ரா விருது :
முன்னதாக, காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் உயிர் தியாகம் செய்த லான்ஸ் நாய்க் நசீர் அகமது வாணிக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. அதனை குடியரசுத்தலைவரிடம் இருந்து அவரது தாயாரும், மனைவியும் பெற்றுக்கொண்டனர்.
கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சிகள் :
இதைத்தொடர்ந்து நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகன அணிவகுப்பும் நடைபெற்றது.
பார்வையாளர்களை கவர்ந்த போர் விமான சாகச நிகழ்ச்சி :
இதைத்தொடர்ந்து நடைபெற்ற ராணுவ வீரர்களின் கம்பீர அணிவகுப்பு மற்றும் போர்விமானங்களின் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.