கனமழை,வெள்ளத்தால் தொடரும் சோகம் - பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு

கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மழை,வெள்ளத்திற்கு 106 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2018-08-18 07:18 GMT
* வெள்ளத்தால் அந்த அம்மாநிலமே உருக்குலைந்த நிலையில், மறுவாழ்விற்கு, உதவ கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 
கோரிக்கை விடுத்துள்ளார்.கேரளா கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரு மழையை எதிர் கொண்டுள்ளது.ஆண்டுதோறும் வழக்கம் போல் பெய்யும் தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு,கோரத் தாண்டவம் ஆடியது.  

* கடந்த 9-ஆம் தேதி தொடங்கிய பருவமழை, தொடர்ந்ததால், 80 அணைகளில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டன. கொச்சி, ஆலப்புழா, கோழிக்கோடு, மலப்புரம் என அனைத்து நகரங்களும் வெள்ள நீரில் மிதக்கின்றன.

* வெள்ளூர் குன்னம் பகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், மக்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். ஆலப்புழாவில், படையினருடன் அப்பகுதி இளைஞர்களும் சேர்ந்து, வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.

* வீடுகளை விட்டு வெளியேற முடியாதவர்களை, 10 கம்பெனி அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், 339 மோட்டார் படகுகள் மூலம் மீட்டனர்.தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் வசிப்பவர்களை, விமானம் மற்றும் ஹெலிகாப்டர் வாயிலாக விமானப் படையினர் மீட்டு வருகின்றனர். 

* மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் இரண்டரை லட்சம் பேர் ஆயிரத்து 500க்கும் அதிகமான நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குமுளி - மினார் பகுதியில் வெள்ள நீர் அரிப்பால், சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

* கன்னூர் மாவட்டத்தில் சேதம் அடைந்த பாலங்கள் மற்றும் சாலைகளை சீரமைக்கும் பணி பணியில் துணை ராணுவ வீரர்கள், காவல்துறை மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர்.  

* வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இவற்றில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.  

* பெரியாற்றில் இருந்து வெளியேறிய வெள்ளம், கொச்சி விமான நிலையத்தை முழுமையாக சூழ்ந்துள்ளது. விமான ஓடுதளத்தில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

* 25 ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்விற்கு, உதவிடுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சமூக வலைத்தளத்தில், உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்