மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பு பணி தீவிரம் : வருகிற செப்டம்பர் மாதம் பணி நிறைவு
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் செப்டம்பர் மாதத்திற்குள் கிடைத்து விடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், 2019ம் ஆண்டு தேர்தலுக்கு தேவையான 13 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.பணியில் தாமதம் ஏற்பட்டாலும் கூட, செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிவடைந்து விடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்த்து ரசீது வழங்கும் இயந்திரங்களும் நவம்பர் மாதத்திற்குள் கிடைத்து விடும் என தேர்தல் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.