ஓடியாடிய `வேட்டையன்' ஹாஸ்பிடலில்-ரஜினியின் தற்போதையை நிலை ?``பல முறை மீண்டு வந்தவர் இம்முறையும்..!'
வேட்டையன் பட ரிலீஸ் பணிகளில் பிசியாக இருந்த ரஜினிகாந்த், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
திரையுலகமே கண்டு வியக்கும் அளவிற்கு 73 வயதிலும் துறுதுறுவென இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் திடீரென சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயிலர் வெற்றிக்கு பின்னர், வேட்டையன் படத்தை நடித்து முடித்த ரஜினிகாந்த், பட ரீலீசுக்காக காத்திருக்கிறார்...
படத்தின் ப்ரமோஷன் பணிகளில் பிசியாக இருந்தவர், அவ்வப்போது விமான நிலையங்களில் தென்பட்டதை காண முடிந்தது...
இப்படி பரபரப்பாகவே இருந்த ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேசான நெஞ்சு வலி மற்றும் அடி வயிற்றில் வீக்கம் காரணமாக ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்பட்டது..
இந்நிலையில், அவருக்கு மருத்துவமனையில் தரைத்தளத்தில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஐசியூ பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது..
24 மணி நேரத்திற்கு ரஜினிகாந்திற்கு ஐசியூ பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னரே, சாதாரண வார்டு பிரிவுக்கு மாற்றப்படுவார் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வேட்டையன் ரிலீசுக்காக ப்ரமோஷன் பணிகளில் பரபரப்பாக இருந்தவருக்கா இந்த நிலை என அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ள நிலையில், கடந்த காலங்களில் இதே போல் அவர் பலமுறை சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளார் என்பது கவனம் பெறுகிறது..
2011ல், போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நீர்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டவருக்கு தொடர்ந்து உடல்நிலை மோசமானது..
இதனால், சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த சமயத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக சிங்கப்பூர் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்றார்.
இந்த காலக்கட்டத்தில் சோகத்தின் உச்சியில் இருந்தனர் அவரது ரசிகர்கள்... மேலும் இதன் பின்னர் படங்களில் கடினமான காட்சிகளில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டார் என்றே சொல்லலாம்...
இதையடுத்து, அண்ணாத்த படப்பிடிப்பின் போது, 2020ல் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர், சில நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
2021ல், மூளைக்கு செல்லக்கூடிய நரம்பில் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 4 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின் பத்திரமாக வீடு திரும்பினார்.
இப்படி பல முறை மீண்டு வந்த ரஜினிகாந்த், இம்முறையும் உடல்நலம் தேறி உற்சாகத்தோடு வருவார் என ஆவலுடன் காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்..