விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சோகம் மறைவதற்குள், நாமக்கல் மாவட்டத்தில், ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் பள்ளியின் 3வது தளத்திலிருந்து கீழே விழுந்து பலியாகியுள்ளார். மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல்துறையில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்த வேண்டிய சி.பி.எஸ்.இ. மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனரக அதிகாரிகள், எந்த கவலையும் இன்றி இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விழுப்புரம் பள்ளியிலோ, நாமக்கல் சி.பி.எஸ்.இ. பள்ளியிலோ உயர் அதிகாரிகள் யாரும் நேரில் சென்று விசாரணை நடத்தாதது குறித்தும், தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்துவது குறித்து எவ்வித அறிக்கையும் வெளியிடாதது குறித்தும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.