மொத்த வேலூரையும் உலுக்கி போட்ட காட்சிகள்.. காட்டுத்தீயாய் செய்தி பரவிய மறுநிமிடமே ஆக்‌ஷன்

Update: 2024-11-09 06:18 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில், நகராட்சி குப்பை கழிவுகளுக்கு மத்தியில் மழலைகள் கல்வி பயின்ற அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. செய்தி பரவிய அடுத்த நிமிடமே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

சின்னஞ்சிறு மழலைகள் பட்டுப்பூச்சி போல சுற்றி வரும் அங்கன்வாடி மையம், குப்பை கிடங்குகளை சேகரிக்கும் இடமாக மாறி இருக்கும் இந்த பேரவலம் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அரங்கேறி இருக்கிறது...

குடியாத்தம் சந்தைப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்த நிலையில், அதே பகுதியில் உள்ள சமுதாய கூட வளாகத்திற்கு அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டிருக்கிறது...

இந்நிலையில், குடியாத்தம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளும், மருத்துவ கழிவுகளும் மூட்டை மூட்டையாக இந்த தற்காலிக அங்கன்வாடி மையத்தில் குவித்து சேகரிக்கப்பட்டிருக்கிறது..

இந்த சூழ்நிலையில், கடும் துர்நாற்றத்திற்கிடையேயும், நோய் தொற்று பரவும் சுகாதாரமற்ற அபாய சூழலிலும் பிஞ்சு மழலைகள் கல்வி பயின்ற புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

இணையத்தில் இந்த விவகாரம் காட்டுத்தீயாய் பரவவே, உடனடியாக விரைந்த குடியாத்தம் நகராட்சி ஊழியர்கள், குப்பைகளை முழுவதுமாக அகற்றி, அந்த இடத்தில் கிருமி நாசினியும் தெளித்து சுத்தம் செய்திருக்கின்றனர்..

வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஒரு இடத்தில் ஊழியர்கள் மொத்தமாக குவித்து வைக்கும் நிலையில், அதனை உடனடியாக அகற்றாமல் விட்டதன் விளைவே இந்த நிலை எனவும், இந்நிலையில் உடனே குப்பைகளை அகற்ற உத்தரவிட்டிருப்பதாகவும் குடியாத்தம் நகராட்சி ஆணையர் விளக்கமளித்திருக்கிறார்

Tags:    

மேலும் செய்திகள்