TNPSC விடைத்தாள் திருத்தியதில் குளறுபடி? - ஆதாரம் காட்டி கொதிக்கும் தேர்வர்கள்

Update: 2024-11-19 07:48 GMT

கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த குரூப் 2 மெயின்ஸ் தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக தேர்வர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

உதவி சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், வருவாய் ஆய்வாளர், தொழிலாளர் நல ஆய்வாளர் என காலிப்பணியிடங்களை நிரப்ப நடைபெறும் குரூப் 2 போட்டித் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது.

பிப்ரவரி மாதம் நடைபெற்ற மெயின் தேர்வில், விடைத்தாள்களை பலருக்கு மாற்றி வழங்கப்பட்டது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேர்முகத் தேர்வுக்கு பிறகு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பணிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் எழுதிய மெயின் தேர்வு விடைத்தாள் நகல்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

500 ரூபாய் கட்டணம் செலுத்தி இந்த விடைத்தாள் நகல்களை வாங்கிப் பார்த்த தேர்வர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக பல விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

அதாவது, மெயின்ஸ் தேர்வு விடைத்தாளை இரண்டு மதிப்பீட்டாளர்கள் தனித்தனியாக மதிப்பீடு செய்யும் நிலையில், இருவரின் சராசரி மதிப்பெண் தேர்வருக்கு இறுதி மதிப்பெண்ணாக வழங்கப்படும்...

இந்நிலையில், பிப்ரவரி மாதம் தேர்வெழுதியவர்களுக்கு இரண்டு மதிப்பீட்டாளர்கள் வழங்கியுள்ள மதிப்பெண்கள் கடுமையாக முரண்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

ஒருவர்... இருவர் என இல்லாமல்....தற்போதைய நிலவரப்படி 350 பேருக்கு இப்படி மதிப்பெண்கள் மிகப்பெரும் முரண்பாடுகளோடு வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் நீதிமன்றத்திற்கு செல்வோம் என காட்டத்துடன் தெரிவிக்கிறார் டிஎன்பிஎஸ்சி பயிற்சியாளர் நடராஜ் சுப்பிரமணியம்.

இதே போல் டி என் பி எஸ் சி பயிற்சியளித்து வரும் பலரும், தேர்வர்கள் பலரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்