மதுப் பிரியர்களுக்கு குஷியான நியூஸ் - மனம் குளிர வைக்கும் தமிழக அரசு கொடுத்த ஆர்டர்

Update: 2024-11-11 05:11 GMT

டாஸ்மாக்குகளில் 10 ரூபாய் கூடுதலாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக நீண்ட காலம் குமுறி வந்த மதுப் பிரியர்களுக்கு... தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வா?.. பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

தமிழகத்தில் உள்ள நாலாயிரத்துக்கு மேற்பட்ட டாஸ்மாக்குகள் மூலம், நாள் ஒன்றுக்கு 120 கோடி ரூபாய்க்கும், வருடத்திற்கு 45ஆயிரம் கோடி அளவிற்கும் மது விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டிலுக்கு அளவுக்கேற்ப 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதல் விலை வசூல் செய்யப்படுவதாக தொடர் புகார்கள் வந்தன.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் படி டாஸ்மாக் மதுபான விற்பனையை டிஜிட்டல் மயமாக்கும் வகையில், பொதுத்துறை நிறுவனமான ரெயில் டெல்லுக்கு 294 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை வழங்கி இருக்கிறது.

இதன்படி, மதுபான உற்பத்தி முதல்.. விற்பனை வரை கண்காணிக்கும் வகையில், அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, மது விற்பனை செய்யப்படும் போது ‌ அந்த விற்பனைக்கு பில் வழங்கப்படவுள்ளது. இதற்கான பரிசோதனை ராமநாதபுரம் மற்றும் அரக்கோணத்தில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிமுகம் ஆகவுள்ள நிலையில், இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

மதுபான பெட்டிகளில் உள்ள க்யூ.ஆர்.கோடையும், மதுபான பாட்டில்களில் லேபிள் மேல் இருக்கும் க்யூ.ஆர்.கோடையும் பில்லிங் இயந்திரம் மூலம் ஸ்கேன் செய்து பில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஃப்லைன் மோடிலிலும் பில்லிங் இயந்திரத்தை இயக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இக்கருவியானது எந்த கடைக்கு வழங்கபடுகிறதோ அந்த கடையில் மட்டுமே பயன்படுத்த இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்