பொங்கல் பரிசு தொகுப்பு காரசார விவாதம் - சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய அமைச்சர் துரைமுருகன்
தேர்தல் நேரத்தில் பொங்கல் பண்டிகை வந்ததால் அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பரிசு தொகை கொடுக்கப்பட்டது என்றும், தாங்களும் தேர்தல் வரும்போது பொங்கல் பரிசு தொகை கொடுப்போம் என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கலகலப்பாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் கோவிந்தசாமி, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் இரண்டாயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டதாகவும், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தி.மு.க. அரசு பொங்கல் பரிசு தொகை வழங்கவில்லை என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், தேர்தல் காலம் என்பதால் தான் அ.தி.மு.க. ஆட்சியில் இரண்டாயிரத்து 500 ரூபாய் கொடுத்தீர்கள், நாங்களும் தேர்தல் வரும்போது பொங்கல் பரிசு தொகை கண்டிப்பாக கொடுப்போம் என கலகலப்புடன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் ஏதும் அ.தி.மு.க. அரசு வழங்கவில்லை என சுட்டிக்காட்டினார்.