திருச்செந்தூர் முருகனுக்கு சாந்தி பூஜை "என்ன கெட்ட நேரமோ.." அதிர்ச்சியில் பக்தர்கள் - என்ன நடந்தது

Update: 2024-11-19 07:24 GMT

திருச்செந்தூர் முருகன் கோயிலில், கோயில் யானையான தெய்வானை மிதித்து யானை பாகன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம், பக்தர்களை பதற வைத்திருக்கிறது. என்ன ஆனது தெய்வானைக்கு?, எதனால் இந்த விபரீதம்?.. விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

தான் வளர்த்து வந்த யானை மிதித்தே பாகன் உயிரிழந்த கோரம்தான் இது..

அதுவும் ஆசையாக தன் பிள்ளை போல பாவித்து வளர்த்து வந்த கோயில் யானை..

முருகனின் அறுபடை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தெய்வானை மிதித்து, பாகன் உதயகுமார் மற்றும் அவரின் உறவினரான சிசுபாலன் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்..

தெய்வானையை உதயகுமார் மட்டுமின்றி, தலைமைபாகன் ராதாகிருஷ்ணன், செந்தில் என தினமும் மாறி மாறி பராமரித்து வளர்த்து வந்திருக்கின்றனர்...

இந்நிலையில், கோவில் யானை கட்டும் அறையில் மதிய நேரங்களில் தெய்வானை நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்..

அப்போது துணைப் பாகனான உதயகுமாரும், அவரது உறவினர் சிசுபாலனும் யானைக் கட்டும் அறையில் இருந்தபோதுதான் இந்த விபரீதம்..

இதில், சிசுபாலனும் யானைப்பாகன் என சொல்லப்படுகிறது..

இந்நிலையில், திடீரென சிசுபாலனிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்ட தெய்வானை, அவரை தள்ளி விட்டு கால் இடறி மிதித்திருக்கிறது..

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உதயகுமார், வேகமாக சென்று தெய்வானையை அதட்டி ஆசுவாசப்படுத்த முயன்றதில், தெய்வானையின் கோபம் அவர் மீதும் திரும்பியதில்தான் மனதை ரணமாக்கியது இந்த மரணங்கள்...

இந்த கோரச் சம்பவத்தில், யானை கட்டும் அறைக்குள் உதயகுமாரின் உறவினர் சிசுபாலன் தெய்வானைக்கு பழம் கொடுக்க வந்ததாக சொல்லப்படுகிறது...

இந்நிலையில், இருவரின் இந்த மரணம் கோயிலுக்கு வந்த பக்தர்களையும், அவர்களது உறவினர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி கதிகலங்க செய்திருக்கிறது...

தகவலறிந்து விரைந்த, தலைமை பாகன் ராதாகிருஷ்ணன் மற்றும் துணை பாகன் செந்தில் ஆகியோர் தெய்வானையை ஆசுவாசப்படுத்தி அறைக்குள் கட்டி வைத்த நிலையில், அறையை சுற்றி மக்கள் செல்வதற்கு தடை விதித்திருக்கின்றனர்..

தொடர்ந்து, சம்பவம் குறித்தான விசாரணையை, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமணன், திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் முடுக்கி விட்டிருக்கும் நிலையில், மருத்துவ குழுவினரும் தெய்வானையை பரிசோதித்து விசாரிக்க உள்ளனர்..

இதனிடையே, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமியின் கோயில் சிறிது நேரம் அடைக்கப்பட்டு சாந்தி பூஜை மற்றும் பரிகார பூஜைகள் நடத்தி, 45 நிமிடங்களுக்கு பிறகு நடை திறக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது....

Tags:    

மேலும் செய்திகள்