மதுரையில் பயங்கரம்.. ICU-வில் மாணவன்.. "அந்த HM-ஏ விசாரிச்சே ஆகணும்.." - சித்தி கொந்தளிப்பு
குழந்தைகள் தினத்தன்று பள்ளியின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கீழே விழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்களின் கவனக்குறைவே என மாணவனின் பெற்றோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறார்கள்
மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது..
இதில் பள்ளியின் மாடியில் இருந்து கீழே விழுந்த 5ஆம் வகுப்பு மாணவன் அகிலன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து 5 நாட்களைக் கடந்த நிலையில், அங்கு மாணவனுக்கு மருத்துவர்கள் தீவிர அளித்து வருகிறார்கள்..
இதனிடையே, இந்த பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை அதிகாரிகள் ஏன் இத்தனை நாட்களாக கண்டுகொள்ளாமல், இருந்தார்கள்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்னிறுத்தி அந்த பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், பள்ளி கட்டிடத்தில் இருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கவனக்குறைவே இதற்கு காரணம் எனக் குற்றச்சாட்டியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாகவே, பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சிகிச்சையில் உள்ள பள்ளி மாணவன் அகிலனுக்கு முறையான சிகிச்சைகள் வழங்கவும் வலியுறுத்தி மாணவரின் பெற்றோர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்த சூழலில் சம்பந்தப்பட்ட பள்ளி தற்போது தற்காலிகமாக இடமாற்றி, தனியார் மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த விவகாரத்தில், கவனக்குறைவாக செயல்பட்டதாக பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.